எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் ஆத்மார்த்த சீடர் பாக்கியலட்சுமி எழுதும் தொடர்...
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்..
சற்குரு எழுத்துச் சித்தர் பாலகுமாரன்அவர்களை நினைத்து நினைத்து,
நெகிழ்ந்து நெகிழ்ந்து இருகரம் கூப்பி வணங்கி ஐயனுடனான எனது
அனுபவங்களை எழுதத் துவங்குகிறேன்.நிறை இருப்பின் அவரே. குறை
இருப்பின்நானே.
இத் தொடரை எழுத வாய்ப்பளித்த திரு.சிவ இராம கணேசன் அவர்களுக்கு
என் மனமார்ந்த வணக்கத்தையும் ,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐயன் பாலகுமாரன் அவர்களே, திரு. சிவ இராம கணேசன் அவர்கள்
மூலமாக இந்த வாய்ப்பை தந்திருக்கிறார்என்றே உணர்கிறேன். எம் ஐயனே...
உம்மை பணிகிறேன்.
ஒரு குழந்தை தன்னுடைய வீட்டிற்குவரும் உறவுகளிடம், நண்பர்களிடம்
தான் வரைந்ததை, தனதுபொம்மைகளை, புது உடைகளை,பரபரத்து அங்கும்
இங்கும் ஓடி அள்ளி எடுத்து வந்து காட்டும். அது போல ஓயனைபற்றி தொடர்
எழுத வேண்டும் என்று நினைத்தவுடன், இது அது... அது இது... என்று புத்தி
பரபரக்கிறது.ஆயினும் முண்டியடித்து ஓடும் நாய்குட்டிகளை இழுத்து பிடித்து
தடவி தடவி உட்கார வைப்பது போன்று மனதை நிதானமாக்கி , கடல் நீரில்
கையளவு நீரை அள்ளி, அதன் சிறப்புகளையும், அற்புதங்களையும்
உங்களோடு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
என் பத்தொன்பதாவது வயதில் முதன் முதலாக நான் படித்த 'போராடும்
பெண்மணிகள்' என்ற புத்தகத்தில் 'விடு,வலி தாங்காம மிதிச்சுட்டா' என்று
ஒரு வரி வரும்.
அவளுக்கு என்னவோ வேதனை, அந்த காயம் தாங்காம உன்மேல் சீறி
விழுந்துட்டா. மத்தபடி அவ நல்லவதான் அன்பானவ தான். அதனால அவ சீறி
விழுந்ததை மனசுல வைச்சுக்காத. போய் பேசு. பிரியமாய் இரு.. என்று
உறவுகளோடு சக மனிதர்களோடு அக்கறை கொண்டு பிணக்கு இல்லாது
ஸ்நேகமாக்கிக் கொள்ளும் எழுத்து என்னை மிகவும் ஈர்த்தது.
அட! யார் இவர்? இப்படிப்பட்டஒருவரைத்தானே மனம் தேடிக்
கொண்டிருந்தது.
புரிந்து கொள்வதே கடினம்.புரிந்தாலும் மதிப்பது அதைவிட கடினம்
என்றிருக்கும் மனிதர்கள் நடுவில் வளர்ந்த எனக்கு. மனித மனங்களை
ஊடுருவி உணர்வுகளை புரிந்து, மதித்து அக்கறையோடு கை பிடித்து
அழைத்துச் செல்லும் இந்தக் கதை மிகுந்த நம்பிக்கையையும்
மகிழ்ச்சியையும் கொடுத்தது.
மறுபடி தேடித்தேடி எழுத்துச் சித்தரின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.
உறங்கும்போதும் பாலகுமாரன் புத்தகங்களை கூடவ வைத்துக் கொண்டுதான்
இருப்பேன். அப்படி அருகில் பாலகுமாரன் புத்தகம்
இருப்பதை இதமாக உணர்ந்தேன்.
அதன்பிறகான எனது சம்பாஷனைகள்அனைத்திலும், பாலகுமாரனே
நிரம்பியிருந்தார். மனம் முழுக்க, புத்தி முழுக்க பாலகுமாரன்...பாலகுமாரன்...
பாலகுமாரன்... என்றிருந்தது.
'இது போதும் என்றானது. அதுவே நிஜமானது. இது பெரு நிகழ்விற்கான
பேரருளின் நகர்வு என்பது அன்று எனக்குத் தெரியவில்லை.
அதுவொரு வேர்கடலை, அவல் பொரி விற்கும் கடை. அப்போது நாங்கள்
வசித்த திருவல்லிக்கேணி,ஆதம் மார்கெட் பகுதியில் அந்தக் கடை
இருந்தது.
அங்கு ஒரு பொது தொலைபேசி உண்டு. ஒருநாள் 'பாலகுமாரன் தொலைபேசி
எண்' என்று எழுதப்பட்டிருந்த ஒரு துண்டு காகிதம் கிடைக்கப் பெற்றேன்.
( இந்த நிகழ்வு பற்றி பிறகு சொல்வேன் ) அதை எடுத்துக் கொண்டு அந்த அவல்
பொறி கடைக்குச் சென்றேன்.அங்கிருந்த பொது தொலைபேசியில்,
காகிதத்தில் குறிப்பிடப்பட்ட எண்களை ஏதோ ஒரு வேகத்தில் அழுத்தி
நம்பிக்கையின்றி டயல் செய்ய, மறுமுனையில் பாலகுமாரன்... என்ற குரல்.
எனக்கு பெரும் ஆச்சரியம். அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும்
மனம் சிறகடிக்கும்.
“நீங்க எழுத்தாளர் பாலகுமாரனா
நிஜமாவா நிஜமாவா.. *
“ஆமாம்மா... எழுத்தாளர் பாலகுமாரன் தான் பேசறேன். நீங்க யாரு? பேர்
என்ன? எங்கிருந்து பேசறீங்க? *
சொன்னேன்.
என்னைப் பற்றி விவரங்கள் கேட்க,அவரின் பொன்னான நேரம் விரயமாகும்
என்றெண்ணி என்னை பற்றி பேசுவதை தவிர்த்தேன். ஆனாலும் விடாது என்
வீடு, என் நலன், என் சூழல் பற்றி அக்கறையோடு விசாரித்தார்.
அறிமுகத்திலேயே அவர் காட்டிய அன்பும் அக்கறையும் நெகிழச்செய்தது.
“பாக்கியலக்ஷ்மி நீங்க எங்க வீட்டிற்கு.
வரலாமே: என்றார்.
நானா..! உங்களை பார்க்கவா..!
எல்லாமே வியப்பாகத்தான் இருந்தது.
சென்னைக்கு வந்து எங்கும் தனியாக செல்லத் தெரியாத கிராமத்து
பெண்ணாகவே நான் இருந்த காலகட்டம் அது. அந்நாளின் நிமித்தமாக எனது
இடது கண் துடிக்க. அந்நாள் என் வாழ்நாளின் பொன்னாளானது.
சாந்தோம் பகுதிக்கு வர, வந்த வேலை வேறு ஒரு நாளுக்கு தள்ளிப் போயிற்று.
வீடு பக்கமென்று அவரது பேட்டியில் கேட்டிருக்கிறேன்.போலாமா? உடன் வந்த
தங்கையிடம் கேட்க,போலாமே ..என்றாள்.
எழுத்துச் சித்தருக்கு ஃபோன் செய்து வரலாமா என்றும், வரவேண்டிய
வழியையும் கேட்டுக் கொண்டேன்.
“எங்கிருந்து பேசுற பாக்கியலக்ஷ்மி
என்று கேட்டதும், சாந்தோம் சர்ச் என்று சொல்லி விட்டேன்.ஆனால் நான்
இருந்த இடத்திலிருந்த சர்ச் வேறு 'சாந்தோம் சர்ச்” வேறு. சென்னை அதிகம்
பழக்கமில்லாத நான் நாங்கள் இருந்த இடம்தான் சாந்தோம் சர்ச் என்று
நினைத்து விட்டேன்.
“சாந்தோம் சர்ச்சிலிருந்து கொஞ்சம் நடந்து வந்தால் காந்தி சிலை வரும்.
அங்கிருந்து ஆட்டோ ஏறி மயிலாப்பூர் நாயுடு ஹால் என கேட்டு இறங்கி,
நாயுடு ஹால்ல பாலகுமாரன் வீட்டுக்கு எப்படி போகணும்னு கேளுங்க.வழி
சொல்வாங்க: என்றார்.
ஆனால் நாங்கள் இருந்த இடத்திலிருந்து காந்தி சிலை இன்னும் கொஞ்சம்
தொலைவு. ஆனாலும் காந்தி சிலையிலிருந்து ஆட்டோ
ஏறச் சொன்னாரல்லவா... அதனால் அங்கிருந்துதான் ஆட்டோ ஏறுவேன்
என்று அடம் பிடித்து அதுவரை நடந்து வந்து ஏறினோம்.
“ஏன்தான் இப்படி இருக்கியோ.. *
தங்கை கேலி செய்து கொண்டு வந்தாள்.
மயிலாப்பூர் வந்து இறங்கியதும் அங்கிருக்கும் ஒரு கடையில் லயன்
டேட்ஸ், லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட் வாங்கினேன். ஆவல் மிகுதியால் அந்த
கடைக்காரரிடமே “பாலகுமாரன் வீட்டுக்கு எப்படி போகணும்: என்று கேட்டேன்
வழியும் சொன்னார். ஆனால் நாயுடு ஹாலில் வழி கேட்க சொன்னாரல்லவா...
அதனால் நாயுடு ஹாலுக்கும் போய்“பாலகுமாரன் வீட்டுக்கு எப்படி
போகணும்: என்று கேட்டேன்.தங்கை , மீண்டும் கேலி செய்து சிரித்தாள்.
பாலகுமாரன் ஐயா சொன்னபடியே செய்ய வேண்டும் என்பது எனக்கு மிக
முக்கியமானதாக இருந்தது. அது பாகன் சொல்லுக்கு உடனே கட்டுப்பட்டு பின்
தொடரும் யானையைப் போல மனம் எழுத்துச் சித்தரின் வார்த்தைக்கு
கட்டுண்டு நடந்தது. இது பல ஜென்ம வாசனை.
"இது இன்று நிகழ்ந்ததில்லை. நேற்று
முளைத்ததில்லை. நின்று நிரம்பிய தாம்
எங்கள் ஈசனின் பெருங்கருணை!
இருபத்தியோரு வயதில். அந்த முதல் சந்திப்பில்...“ஓ... உனக்கு கடவுளை
பார்க்கணுமா வா வா எதிரே உட்கார்.கண்ண மூடு உள்ள பாரு. உள்ள பாரு.
நீ எங்க இருக்கன்னு பாரு *தொடர்ந்து சொன்னார். ஐந்து
நிமிடங்கள் கழித்து, மெதுவா கண்ணை திற பாக்கியலக்ஷ்மி... “* என்றார்.
பின்னர் சில விஷயங்கள் சொன்னார்.அவர் சொன்னதை கேட்டு மிகவும்
ஆச்சரியமடைந்தேன். உள்ளுக்குள் நான் நினைத்ததை சரியாக சொல்றாரே..
சந்தோஷமாக இருந்தது. பேசியது சில நிமிடங்கள் தான்.ஆனால் பல
வருடங்கள் பழகியதாய் உணர்ந்தேன். வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு,
பார்வையிலிருந்து விலகும் வரை பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும்
புன்னகைத்து கை அசைத்தார். ஐய்...” குதூகலமாய் இருந்தது. கண்ணுக்கு
தெரியும் தூரம் வரை காத்திருந்து, பார்த்திருந்து புன்னகைத்து
கை அசைக்கிறாரே.. மனம் குளிர்ந்தது.
சின்ன விஷயமாகத்தான் தெரியலாம். ஆனால் மிக முக்கியமான
விஷயம். இந்த நேசம் கொடுக்காது, இந்த வித்தை தெரியாது வாழ்க்கை
சிறப்படைவதில்லை..
இதில் எங்கள் ஐயன் சக்கரவர்த்தி .இந்த சக்கரவர்த்தியிடம் பெற்ற
பொக்கிஷங்களை மேலும் உங்களோடு பகிர்ந்து கொள்ள திருவண்ணாமலை
மகான் கடவுளின் குழந்தை பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களையும்
சற்குரு எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களையும் வேண்டி பணிகிறேன்.
-தொடரும்
0 Comments